அமெரிக்க-சீனப் பனிப்போருக்குள் சிக்குண்டுவிட்ட ஈழத்தமிழர் விவகாரம்!

தனபாலா

‘ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கைதான், அந் நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையும்’ என்றொரு கூற்றுண்டு.

உழைப்பு சுரண்டப்படுவதையே மார்க்சிஸம் முதன்மைப்படுத்தியது. ஆனால் இன்றைய அதிநவீன ஏகாதிபத்தியமோ உழைப்பை மட்டுமன்றி, உலகளாவிய சந்தைகளைக் கைப்பற்றுவதன் மூலமும், வர்த்தகத்தை உலகளாவிய ரீதியில் விரிவாக்குவதன் மூலமும் உலகின் நாலா புறங்களிலும் உள்ள மூல வளங்களைச் சுரண்டுதல், மக்களின் மூளையைச் சுரண்டுதல், கலாச்சாரத்தைச் சுரண்டுதல் என அனைத்து வகை மனித ஆற்றல்களையும் அவர்களோடு பின்னிப் பிணைந்த இயற்கை வளங்களையும் சுரண்டுவதையே தொழிலாகக் கொண்டுள்ளது. நீதி, நியாயம், தர்மம் என்பன எல்லாமே இதற்கு கீழ்ப்பட்டவைதான்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் இத்தகைய சந்தை மூலவள ஆதிக்கப் போட்டிக்கும் இடையே பிரிக்க முடியாத மிக நெருங்கிய தொடர்புண்டு. இலங்கையின் இனப்பிரச்சனையைப் பயன்படுத்தி கொழும்பின் நட்பைப் பெறுவதன் மூலம் இந்து சமுத்திரத்தில் சீனா தனது வர்த்தக மூலவள ஆதிக்கப் போட்டியில் முன்னேறி வருகின்றது.

இந்நிலையில் சிங்கள அரசின் இனப்படுகொலையை மேற்குலகம் முதன்மைப்படுத்தியது. ஆனால் மேற்குலகிற்கு கொழும்பு இதில் விட்டுக் கொடுப்புக்களைச் செய்யத் தயார் என பச்சை விளக்கு காட்டிய நிலையில் வொசிங்டன் இனப்படுகொலை விவகாரத்தை கிடப்பில் போடத் தயாராகிவிட்டது.

உதாரணமாக நைஜீரியாவின் எண்ணை வயல்களில் 60 வீத வயல்களை சீன நிறுவனங்கள் கொள்வனவு செய்துள்ளன. மேலும் ஆபிரிக்காவின் சந்தையும் வேகமாக சீனாவின் கையில் வீழ்ந்து கொண்டிருக்கின்றது. இந் நிலையில் இந்து சமுத்திரத்தின் மையமான இலங்கையில் சீனா ஆதிக்கம் பெற்றுவிட்டால் சீனாவின் சந்தை மற்றும் மூலவள ஆதிக்கம் என்பன ஆபிரிக்கா மற்றும் ஆசியா சார்ந்த இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளில் கையோங்கிவிடும் என்ற ஒரு நிலையுண்டு.

இத்தகைய கவலை மேற்குலகில் தலை தூக்கியிருந்த காலத்தில் இலங்கையின் வெளியுறவு அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ் அமெரிக்க இராஜாங்க அமைச்சரான திருமதி ஹில்லரி கிளின்டனைச் சந்தித்து பச்சை விளக்கு காட்டியதன் பின்னணியில் இலங்கை அரசு மீதான யுத்தப் படுகொலைக் குற்றச்சாட்டை அமெரிக்கா அடக்கி வாசிக்க ஒப்புக் கொண்டுவிட்டது.

இலங்கை மீதான யுத்த மீறல் குற்றச்சாட்டென்பது உண்மையானது. உண்மையில் சாதாரண யுத்த மீறல் குற்றச்சாட்டுக்கும் அப்பால் இலங்கையில் நிகழ்ந்தது ஓர் இனப்படுகொலையாகும். ஆனால் குறைந்த பட்சம் யுத்த மீறல் குற்றச்சாட்டின் பெயரிலாவது அமெரிக்கா இப்படுகொலையை கண்டித்தமை தமிழ் மக்களின் மனங்களில் நீதியின் பெயரால் ஓர் ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது.

அமெரிக்கா இக் குற்றச்சாட்டை கையிலெடுப்பதன் நோக்கத்தை தெளிவாகப் புரிந்து கொண்ட சிங்கள இராஜதந்திரிகள் சந்தையைப் பங்கு போடும் விடயத்தில் மேற்கு ஏகாதிபத்தியத்துக்கும், கிழக்கு ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேண தயாரென்ற அறிவித்தலை பீரிஸ் வாயிலாக வெளியிட்டதன் மூலம் இக்குற்றச்சாட்டு கோவைகளை கிடப்பில் போட வைத்துவிடலாம் என்று நம்பினர்.

இராஜபக்ச அரசாங்கத்தின் தலையாய பிரச்சனையாக தற்போது இருப்பது யுத்த மீறல் குற்றச்சாட்டுத்தான். இதற்கான கோவைகளை ஓராண்டு மூட வைத்துவிட்டால் பின்பு இக் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துவிடலாம் என்றும், அதுவரை மேற்குலகம் கேட்கும் கோரிக்கையான சீன முதன்மையைப் பின்தள்ளல் என்ற விவகாரத்திற்கு தற்காலிகமாக ‘ஆம்’ என்று தலையாட்டியுள்ளது.

இதன் பின்பு யுத்தக் குற்றச்சாட்டு அச்சுறுத்தல் பின்தள்ளப்பட்ட நிலையில் சீனாவுடன் தோளோடு தோள் கோப்பதே சிங்கள இராஜதந்திரத்தின் திட்டமாகும்.

ஓராண்டின் பின்பு அமெரிக்காவின் எதிர்பார்க்கை வீண்போகும் போது ஈழத்தமிழர் பிரச்சனையை அமெரிக்கா கையில் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதில் விசித்திரம் என்னவெனில் சிங்கள இராஜதந்திரிகளிடம் அமெரிக்கா ஓராண்டாவது தோல்வி கண்ட பின்புதான் உண்மையை உணரத் தலைப்படும் என்பது.

இப்பிரச்சினையை நாம் மேலும் ஆராய்ந்து உண்மைகளை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

’24 மணிநேரம் ஆங்கிலக் கால்வாய் என்கையில் இருக்குமேயானால் அடுத்த நிமிடம் முழு ஐரோப்பாவும் என்கையில் இருக்கும்’ என்று கூறிய நெப்பொலியன் ‘திருகோணமலை என்கையில் இருக்குமானால் அடுத்தகணம் முழு உலகமும் என்கையில் இருக்கும்’ என்று கூறினார்.

நவீன விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சி நிலையில் இயற்கைத் துறைமுகமான திருகோணமலைக்கு அப்பால் செயற்கைத் துறைமுகங்களை இலங்கையின் பல பகுதிகளில் கட்ட முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

இந்து சமுத்திரத்தில் மத்தியில் இலங்கை அமைந்திருப்பது என்ற முக்கியத்துவத்துடன் கூடவே அது இந்தியாவுக்கு அருகாமையில் அமைந்திருக்கின்றது என்பதும் இன்னொரு முக்கியத்துவமாகும். எனவே இந்த இரட்டை முக்கியத்துவத்துக்கு ஊடாகவே இதை நாம் பார்வையிட வேண்டும்.

அதாவது இந்து சமுத்திரத்தின் மையத்தில் இருக்கும் அதன் வர்த்தக கடல்வழிப் போக்குவரத்து கேந்திர முக்கியத்துவத்துக்கு அப்பால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலான ஓர் அமைவிடத்தை அது கொண்டுள்ளது. தீவு தன் சக்திக்கு உட்பட்ட வகையில் அது இந்தியாவுக்கு அச்சுறுத்தல் அல்ல. அது இந்தியாவின் எதிரி வல்லரசு நாடுகளுடன் சேரும்போது அது இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஆகிவிடுகின்றது. இத்தகையதொரு பலம் தமக்கு இருப்பதை சிங்கள இராஜதந்திரிகள் சரிவரப் புரிந்து அதைக் கையாண்டு வெற்றி பெறுகிறார்கள்.

இந்துசமுத்திரப் பிராந்திய அடிப்படையில் இலங்கையில் தோன்றியுள்ள புதிய யதார்த்தத்தை சிறிது பரிசீலிப்போம்.

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையை மையமாகக் கொண்டு அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் அல்லது கெடுபிடி யுத்தம் உதயமாகிவிட்டது.

அம்பாந்தோட்டையில் சீனா நிர்மாணிக்கும் துறைமுகமும், மாத்தறையில் சீனா நிர்மாணிக்கும் விமான நிலையமும் நீண்ட கால இராணுவ கேந்திர நோக்கு நிலையைக் கொண்டவை. வர்த்தக அடிப்படையிலும் சரி, இராணுவ அடிப்படையிலும் சரி இவை இரண்டும் இப்பிராந்தியத்தில் அதி முக்கியத்துவமானவை.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் 40 கிலோ மீற்றர் நீள அகலத்துக்கு விஸ்தரிக்கப்படக் கூடிய இடவசதியைக் கொண்டது. அத்துடன் இதன் புவியியல் பண்பும் துறைமுக விருத்திக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இப்பிராந்தியத்தில் இது ஒரு தலையாய துறைமுகமாக விளங்கக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளது.

கொழும்பு, திருகோணமலை போன்ற துறைமுகங்கள் இது போன்ற விருத்திக்கான இடவசதியைக் கொண்டிருக்கவில்லை. விரும்பியளவுக்கு இத்துறைமுகத்தின் பின்தள வசதிகள் விருத்தி செய்யப்படக்கூடிய வாய்பை அனைத்து வகைகளிலும் இது கொண்டுள்ளது.

இடவசதி மட்டுமன்றி தொழிலாளர் வசதி மற்றும் அத்தியாவசியப் பண்ட விநியோக வசதி, ஏனைய மனித வள வசதிகள் என இதன் வசதிகள் மிக அதிகமானவை.

இத்துறைமுகத்துக்கு அண்மையாக விமானநிலையம் அமைக்கப்படுவதால் இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது. மாத்தறையில் அமையும் விமான நிலையம் மும்பை விமான நிலையத்துக்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

2000 கெக்டர் ஏக்கர் நிலத்தில் இவ்விமான நிலையம் விருத்தி செய்யப்படுகின்றது. தற்போது இதன் முதலாம் கட்டமாக 800 கெக்டர் ஏக்கர் நிலத்தில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூன்று கட்டங்களும் பூர்த்தியானதும் துறைமுகத்தோடு இணைத்துப் பார்க்கையில் இதற்கு இருக்கக் கூடிய இராணுவ முக்கித்துவம் மிகப்பெரியது.

இது அமெரிக்காவின் டியர்க்கோகாசியத் தளத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க வல்லது. இது இப்பிராந்தியத்தின் சமநிலையை சீனாவுக்கு சாதகமாக மாற்ற வல்லது.

இவ் விமான நிலையத்துக்கு வர்த்தக ரீதியில் ஒரு புதிய தனித்துவம் உண்டு. வர்த்தகப் போட்டியில் கைத்தொழில் பண்ட வர்த்தகம் அதி முக்கியத்துவத்தை வகிக்கின்றது.

இதில் சீனா ஒரு புதிய வர்த்தக வழிமுறையைக் கையாள உள்ளது. உணவுக் கலாச்சாரத்தில் விருத்தியடைந்த சீன நாகரீகம் அந்தச் சிந்தனை மரபிற்கூடாக கைத்தொழில் பண்ட வர்த்தகப் போட்டிக்கு மேலதிகமாக உணவுப்பண்ட வர்த்தக ஏகபோகத்தைப் பெறத் திட்டமிட்டுள்ளது. அதற்கு இந்த விமானத்தளமே அடிப்படையானது. அதாவது தற்போது இறைச்சி, மீன் வகைகள் அடைக்கப்பட்ட ரின், பக்கற் உணவுகளாக பல ஆண்டுகாலப் பதப்படுத்தலில் வினியோகிக்கப்படுகின்றது.

ஆனால் இவ் விமான நிலையத்தை சரக்கு விமான நிலையமாகப் பயன்படுத்தி இறைச்சி, மீன் ஆகிய ஜீவ உணவுகளை விமானத்தின் மூலம் அதன் புதுமை குன்றாது உடனுக்குடன் விரைவாக வினியோகிக்க முடியும். மனிதன் உடன் உணவை விரும்புவது இயல்பு. இந்த உடன் உணவு வர்தகமானது மேற்குலகினதும், ஜப்பானதும் அடைக்கப்பட்ட உணவுப் பண்ட வர்த்தகத்தைப் பின்தள்ளிவிடும்.

இந்த வகையில் தெற்கு தென்கிழக்காசிய பிராந்தியங்களுக்கிடையே உள்ள மேற்படி உணவு வளத்தை ஒரு சிறந்த வர்த்தகப் பண்டமாகச் சீனா ஆக்குவதன் மூலம் வர்த்தக ஆதிக்கத்தில் சீனா சிறப்பிடம் பெற முடியும். இதனால் இலங்கை மீதான சீனாவின் கவனமும் பிடியும் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை.

இவ்வாறு பார்க்கையில் சீனா அதன் பிடியை இலங்கையில் தளர்த்துவதற்கான வாய்ப்புச் சிறிதும் இல்லை. யுத்தக் கொலைக் குற்றச்சாட்டில் இருந்து மீள்வதற்காக ராஜபக்ச அரசாங்கம் சிறிது காலம் ஒரு நாடகமாட முடியும். ஆனால் அதன் தர்க்கபூர்வ நிலைமையின்படி அப்படி ஒரு நாடகம் நீண்ட காலத்துக்குச் சாத்தியப்படாது.

மேலும் சீனாவை முன்னிறுத்தி ராஜபக்ச அரசாங்கம் தனது பேரம் பேசும் சக்தியை அமெரிக்கா மற்றும் மேற்கைரோப்பிய நாடுகள், ஜப்பான், இந்தியா என்பவற்றுடன் அதிகரித்து தனக்கான அனுகூலங்களை அதிகமாக்குமே தவிர அடிக்கட்டுமான வளர்ச்சிப் போக்கு அடிப்படையில் இலங்கை தன்னைச் சீனச் சார்பாக ஆக்கிவிட்டது என்பதே உண்மை.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீனாவின் அடிக்கட்டுமான வளர்ச்சிக்கு உள்ளால்தான் இதனைப் பார்க்க வேண்டுமே தவிர ஹில்லரிக்கு பீரிஸ் கொடுத்த வாக்குறுதிக்குள்ளால் அல்ல.

பாக்கிஸ்தான் அணுகுண்டைப் பரிசோதித்ததும் பாக்கிஸ்தான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. பாக்கிஸ்தான் உடனான தனது இராணுவ மற்றும் புலனாய்வு உதவிகளை அமெரிக்கா நிறுத்திக் கொண்டது.

ஆனால் இதற்குப் பதிலாக நவாஸ் ஷரீவ் அரசாங்கம் நேரடியாக பாக்கிஸ்தானை சீனாவுக்குத் திறந்து விட்டது. தனது வெற்றிடத்தை சீனா நிரப்புவதைக் கண்ட கிளின்டன் நிருவாகம் தனது உத்தியை மாற்றிக் கொண்டது. பாக்கிஸ்தானுக்கு உதவுவதுதான் சீனாவை வெளியேற்ற வழி என அது முடிவுக்கு வந்தது. ஆயினும் பாரம்பரிய நண்பர்களின் உறவைப் பின்தள்ள அமெரிக்காவால் முடியவில்லை.

இப்பின்னணியில் அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் மிகவும் அவசியப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா இருப்பதானது ஒருபுறம் ஈரானையும், மறுபுறம் பாகிஸ்தானையும் கட்டுப்படுத்த வல்லது. இப்பின்னணியில் இலங்கை வேறொரு வல்லரசின் கையில் விளாது இருக்கும் வரை அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் தென்னாசியா வரை போதுமானது என்றொரு கருத்துண்டு.

ஆனால் இலங்கை சீனாவின் கைக்குப் போய்விட்டால் அமெரிக்காவின் பூகோள வியூகமே பாதிப்புக்கு உள்ளாகிவிடும். எனவே அமெரிக்கா இத்தகைய நலனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்குமே தவிர ஈழத் தமிழரின் நீதி நியாயங்களுக்கு அல்ல.

ஆனால் இலங்கையின் வாக்குறுதிகள் காற்றில் கரைந்து போக ஓராண்டு காலமே அதிகமானதாகும். அப்போது அமெரிக்காவுக்கு மாற்று வழி ஈழத் தமிழராகவே இருக்க முடியும். ஏனனில் ஈழத் தமிழரின் பிரதேசம் தரை, கடல் ரீதியில் அதிக முக்கியத்துவமானது.

எனவே இதில் அமெரிக்கா சிங்கள இராஜதந்திரிகளிடம் தோல்வி அடைந்து பின்பு இந்திய அனுசரணையுடன் ஈழத்தமிழர் பக்கம் திரும்ப வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் அதற்கு ஏற்படும்.

ஆனால் இதில் துயரகரமான விடயம் என்னவெனில் மேற்படி வல்லரசுகளுக்கு இடையேயான வர்த்தக ஆதிக்க கேந்திர முக்கியத்துவப் பனிப்போர் போட்டிக்கு முதலில் பலியாவது அரசற்ற பலவீனமான ஈழத் தமிழர்தான்.

Leave a comment